மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலும் முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் இருக்காது. அதையும் மீறி மோடி அரசாங்கத்தின் பட்ஜெட் மீது அனைவரின் கவனம் உள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்வார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் இடைக்கால நிதி அமைச்சராக பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பியுஷ் கோயல் பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைநிகழ்த்தினார். இந்த கூட்டத்தொடர் வருகிற 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் என கூறப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்படலாம். இடைக்கால பட்ஜெட்டில் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் சலுகைகள் அளிக்கப்படும் எனத்தெரிகிறது. குறைந்த வருமானம் பெறும் நபர்கள் வீடு வாங்குவதற்கு கூடுதல் மானியம் கிடைக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளது. விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டாலும், ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.