Veterinary and Animal Sciencesஎம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் நேற்றுடன் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வும் முடிந்துவிட்டதாகவும், இந்த படிப்புக்கான அனைத்து இடங்களும் நிறைவு பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு (பி.வி.எஸ்.சி.) 320 இடங்கள், பி.டெக். உணவுத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 இடங்கள், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 இடங்கள், பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் ஜூலை 13ஆம் தேதி தொடங்கியது.

கால்நடை அறிவியல் படிப்பில் சென்னை, திருநெல்வேலி, ஒரத்தநாடு, நாமக்கல் ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதம் உள்ள 272 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

முதல்நாளான ஜூலை 13-ல் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான 34 இடங்களில் 28 இடங்கள் நிரம்பின. மீதம் உள்ள 6 இடங்களுடன் மொத்தம் 244 இடங்களுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,600 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். முடிவில் 4 கல்லூரிகளிலும் மீதம் உள்ள 244 இடங்களும் ஒரே நாளில் நிரம்பின. இதில், 128 பேர் கட்டணம் செலுத்திவிட்டனர். இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்த ஜூலை 29-ஆம் தேதி கடைசித் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களின் இடங்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்களுக்கும் மீண்டும் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதே போல் கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் உள்ள 80 இடங்களில் சிறப்புப் பிரிவினருக்கும், பொதுப்பிரிவினருக்கும் இன்று காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். இந்தப் பிரிவுகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் இல்லை. எனவே 80 இடங்களும் தமிழக மாணவர்களுக்கே ஒதுக்கப்படும் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

English Summary :Places full of veterinary studies on the same day.