பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு கருதி, அதை பிளாஸ்டிக் வடிவில் கொடுக்க அரசு முடிவு செய்ததை அடுத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் எல்காட் நிறுவனம் மூலம் பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.45 மணி முதல், மாலை 5.45 மணி வரை பிளாஸ்டி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பித்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவர்கள், ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணை பொது இ-சேவை மையங்களில் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற 40 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும், ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்கள், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால், பொது இ-சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணத்துடன், ஆதார் எண்ணை தெரிவித்து, பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : For the safety and protection, plastic Aadhar card is now distributed in Thiruvallur District.