பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு விநியோகித்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக அந்தந்த பள்ளியிலேயே வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு பாடநூல் கழகம் மூலமாக புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
முப்பருவ கல்விமுறை: தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் முப்பருவ கல்விமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 3-ம் பருவம் என பாடங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் (2018-19) முதல் பருவத்துக்குரிய பாடங்களும், அதேபோல், 10-ம் வகுப்புக்கான அனைத்துப் பாடப் புத்தகங்களும், பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களின் முதல் தொகுதியும் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன.
இதைத்தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2-வது பருவத்துக்குரிய பாடப் புத்தகங்களும், மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு 2-ம் தொகுதிகளும் வழங்கப்பட வேண்டியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
2.11 கோடி புத்தகங்கள்: 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்குரிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு விட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஒரு கோடியே 34 லட்சம் புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்காக 77 லட்சத்து 51 ஆயிரம் புத்தகங்களும் (மொத்தம் 2 கோடியே 11 லட்சம்) தயாராக உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான அக்டோபர் 3-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் சென்றுவிடும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனைக்காக இந்த மாத இறுதியில் கிடைக்கும்.
29 வகையான பாடங்கள்: மேல்நிலைக் கல்வியைப் பொறுத்தவரையில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரி – தாவரவியல், உயிரி-விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, வணிகவியல், பொருளாதாரம், கணக்குப் பதிவியல், வரலாறு, அரசியல் அறிவியல், வணிக கணிதம் என 29 வகையான பாடங்களுக்கு 2-ம் தொகுதிகள் உண்டு.
அச்சடிக்கப்பட்ட 2-ம் தொகுதி புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு படிப்படியாக அனுப்பப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த அச்சிடும் பணி கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு 2-ம் தொகுதி புத்தகங்கள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும்.