பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 74 மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தேர்வெழுதினர்.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 74 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். முதல் நாளன்று முதன்மை மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவார்கள். இதற்கிடையே, ஊதிய முரண்பாடு பிரச்சினை தொடர்பாக முதல் 3 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அதன்பிறகும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை முற்றிலும் புறக்கணிக்கப் போவதாகவும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
உள்ளிருப்பு போராட்டம்
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் வே.மணிவாசகன் கூறியதாவது: ஊதிய விஷயத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 2009-ம் ஆண்டு பணியில் இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதே நாளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களைக் காட்டிலும் குறைவான சம்பளம் பெறும் முரண்பாடான நிலையே தொடர்ந்து நிலவுகிறது. 7-வது ஊதியக் குழுவிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆரம்பநிலை அடிப்படைச் சம்பளத்தில் வெறும் 500 ரூபாய்தான் வித்தியாசம்.
மத்திய அரசு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிர்ணயித்துள்ள ஊதிய விகிதத்தை தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகை யில் விடைத்தாள் மதிப்பீட்டின்போது முதல் நாட்கள் காலையில் வழங்கப்படும் 10 விடைத்தாள்களை மட்டுமே பெற்றுக்கொண்டு காலையில் 5 விடைத்தாள், பிற்பகல் 5 விடைத்தாள் என்று மதிப்பீடு செய்வோம். பிற்பகல் வழங்கப்படும் 10 விடைத்தாள்களை வாங்க மாட்டோம்.
இந்த வகையில் எங்களின் உள்ளிருப்பு போராட்டம் அமைந்திருக்கும். 3 நாட்களுக்குள் அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை முற்றிலும் புறக்கணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
புறக்கணிப்பு
இதனிடையே ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) அறிவித்துள்ளது.
புறக்கணிப்பு செய்வது தொடர்பாக, ஜேக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.ஆறுமுகம் மற்றும் அ.வின்சென்ட் செல்வராஜ் தலைமையில் ஆசிரியர் சங்கத்தினர் நேற்று தமிழக முதல்வர் அலுவலக அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
English Summary: Plus 2 Paper Correction Starts from today.