தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மே 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தேர்தல் குறித்த பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக இணையதளங்களில் அரசியல் கட்சி தலைவர்களை இழிவாக சிலர் விமர்சனம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சி தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்பவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 188–வது பிரிவின்கீழ் 1 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ. 200 அபராதம் விதிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது:
அரசியல் கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் இழிவாக விமர்சனம் செய்வது சட்டப்படி குற்றமாகும். பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக அளவில் இழிவான விமர்சனங்கள் வருவதாக புகார்கள் வருகின்றன. இவற்றை கண்காணிக்க தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக புதிதாக சாப்ட்வேட் வாங்கி அதன் மூலம் கண்காணிக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாட்ஸ்அப்பில் தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்தால் இந்திய தண்டனை சட்டம் 188–வது பிரிவின்கீழ் 1 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ. 200 அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படுகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நடைமுறைகளை மீறி அரசியல்வாதிகளை சந்தித்தால் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசியல் கட்சியினர் சுவர்களில் எழுதியுள்ள விளம்பரங்களை அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் ஊழியர்களை நியமித்து அழிக்கும். இதற்கான செலவு அரசியல் கட்சிகளிடம் வசூலிக்கப்படும். சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியில் அரசின் சாதனைகளை அரசு செலவில் விளம்பரப்படுத்தப்படுவதாக வந்துள்ள புகார் குறித்தும் விசாரிக்க இருக்கிறோம்.
தேர்தல் ஆணையம் விதிப்படி அரசு சாதனைகளை இப்போது அரசு செலவில் விளம்பரப்படுத்தக்கூடாது. தி.மு.க. தரப்பில் இன்று 3 புகார் மனுக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதை அரசு துறைக்கு அனுப்பி விளக்கம் கேட்க இருக்கிறோம்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
English Summary: Political party leaders have criticized the jail for contempt in Whats App.