வண்டலூர்: பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் அனைத்தும் பெருங்களத்தூர் வழியாக செல்லாது. அதற்கு பதில் வண்டலூர் வெளிவட்டச்சாலை வழியாக செல்லும். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்து அங்கு உள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் பொதுமக்கள் வந்து செல்வதற்காக தமிழக அரசு சார்பில் பஸ் நிலையத்தை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்: மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பயணிகள் அமருவதற்கு பந்தல் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, இதே போல ஆம்னி பஸ் பயணிகளுக்கு தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது இது மட்டும் இல்லாமல் பஸ் நிலையத்தில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகளை தடுப்பதற்கு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்: தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் பயணிகளை கண்காணிப்பதற்கு அதிநவீன கேமராக்கள் 6 இடங்களில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் காட்சிகளை உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் தற்காலிக பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *