சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். வருகிற 15-ம் தேதி தை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் வியாழக்கிழமை வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல தனியார் நிறுவனங்களும், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கியிருக்கின்றன. இதனால், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்: அதன்படி, சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. தினசரி இயக்கக்கூடிய 2,275 பேருந்துகளை தவிர, நேற்று முதல் தினமும் 5,163 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 14,263 பேருந்துகள் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்வதற்காக 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
4 பஸ் நிலையம்: சென்னையில் இருந்து வெளியூருகளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளில் 1.38 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். சிலர் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து வருகின்றனர். கோயம்பேடு, கேகே நகர், மாதவரம், தாம்பரம் சானடோரியத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
1 லட்சம் பேர் பயணம்: இதில், நேற்று நள்ளிரவு வரை மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். பிற மாவட்டங்களில் இருந்து 10,000க்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் நெரிசலின்றி செல்ல தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் அதிகரிக்கும்: கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் மட்டும் வருமானம் 17.47 கோடி ரூபாய். இந்த ஆண்டு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆம்னிகளுக்கு செக்: இதற்கிடையே, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிகள் குறித்து, 18004256151 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி போக்குவரத்துத்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.