குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ. 258 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தைப்பொங்கல் திருநாள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இயற்கையின் அருளாலும் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருள்களை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த திட்டத்துக்கு தற்போது தமிழக அரசு ரூ. 258 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.