சென்னையில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. இதையடுத்து, சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்ளவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைபடுவதைத் தடுக்கவும் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 7-வது மாடியில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி ஆகியவை ஒருங்கிணைந்து இந்த கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளன. தொடர் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ, குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தாலோ, மழைநீர் சூழ்ந்தாலோ பொதுமக்கள் இந்த சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை (044-23452437) தொடர்பு கொண்டு தெரிவித்தால் போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடம் விரைந்து மழை நீரை அகற்றி தேவையான உதவிகளைச் செய்வார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “மழைக்கால வெள்ள தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கினாலும் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் முக்கியமான 14 சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கநடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மீறி அங்கு தண்ணீர் தேங்கினாலும், அதை மின்சார மோட்டார் பம்ப் மூலம் விரைந்து அகற்றநடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர்தேங்கி மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே,மழையாக பொதுமக்களுக்கு இன்னல் ஏற்பட்டால் இந்த சிறப்புக்கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம்” என்றனர்.