autoதமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்வதற்கு ரெயில் பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ வசதி அளிக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் பொதுமக்களிடம் தங்கள் இஷ்டப்படி ஆட்டோ கட்டணம் வசூல் செய்வதை தடுப்பதற்காக சென்ட்ரல் நிலைய மேலாளர் எடுத்த முயற்சியால் தற்போது ஆட்டோ கட்டணம் வரையறுக்கப்பட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்திற்கு ஒரு கட்டணமும், இரவு நேரத்திற்கு தனி கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பகல் நேரத்தை விட இரவில் பயணம் செய்யும்போது அந்த கட்டணத்தில் 50 சதவீதம் கூடுதலாக கட்டணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் ரெயில் நிலைய ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ டிரைவர்கள் சங்கம், ரெயில்வே மற்றும் அரசு ரெயில்வே போலீஸ் ஆகியவை இணைந்து இந்த புதிய ஆட்டோ கட்டணத்தை சமீபத்தில் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

சென்னை பெருநகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோ கட்டணம் எவ்வளவு என்ற விவரம் பட்டியல் இடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் செல்லும்போது பொதுமக்கள் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

அந்த கட்டணத்தை முன்பே செலுத்தி ரசீது வாங்கி கொள்ள வேண்டும். பயணம் செய்யும்போது ஆட்டோ டிரைவர்கள் கூடுதலாக பணம் கேட்டு தகராறு செய்தால் ரசீதில் உள்ள போனுக்கு தகவல் தெரிவித்தால் அந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த புதிய கட்டணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் இணைந்து இருப்பதால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் எப்போது வேண்டுமானாலும் ‘ப்ரீபெய்டு ஆட்டோ’ எளிதில் கிடைக்கிறது.

இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கொடுத்து விட்டு எவ்வித வாக்குவாதமும் செய்யாமல் பயணம் செய்ய முடிவதால் சென்ட்ரல் நிலைய பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக உள்ளது.

English Summary: Prepaid Autos in Night at Central Railway Station.Public reception.