சென்னையில் டெங்கு பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது டெங்குவைத் தடுப்பதற்காக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுதோறும் 3,500 களப் பணியாளர்கள் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர் என, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆணையர் விக்ரம் கபூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்குவைத் தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 200 வார்டுகளிலும், கொசு அடிப்பதற்காக 306 இயந்திரங்கள், 43 மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இதேபோல், 273 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளிற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், கணேசபுரம் உள்ளிட்ட 16 சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 111 மழைநீர் மாற்று இயந்திரங்கள்,160 நீரேற்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், சென்னைப் பகுதியில் உள்ள 252 அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 17 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அதையொட்டி உள்ள பகுதிகளில் வீடுதோறும் சென்று டெங்கு ஆய்வு செய்வதற்கு 3,500 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சம் வீடுகளிலும் ஆய்வு செய்ய வசதியாக பல்வேறு பகுதிகளாக(செக்டர்) பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தினமும் 80 வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை குறித்த தகவலை டெங்கு கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இதன் அடிப்படையில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று கூறினார்
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் டெங்குவை ஒழிக்க அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English summary-preventions to control dengue in chennai ,Chennai corporation commissioner Vikram Kapur