சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு செல்கிறார். மாலை சரியாக 4 மணியளவில் அவர் பொதுக்கூட்ட மேடைக்கு வரவுள்ளார். நிகழ்ச்சியில் பல புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதனிடையே பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பார்வையிட்டனர். அப்போது அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், பெஞ்ஜமின், எம்.பி மரகதம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூட்டம் நடைபெறும் இடத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் அமர்வதற்காக இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.