சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 முதல் விண்ணப்ப பதிவு துவங்கும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும்.
இதற்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு, பள்ளிகளுக்கு செலுத்தும். இதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல், 22ல் ஆன்லைன் பதிவு துவங்க உள்ளது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே, 18 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பு இல்லாவிட்டால், அங்கு முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
ஒவ்வொரு பள்ளியிலும், எவ்வளவு இடங்கள் வழங்கப்படும் என்ற விபரம் பள்ளியின் தகவல் பலகையில் ஏப்ரல், 10 முதல் தெரிவிக்கப்படும். மாணவர்களை சேர்க்க விரும்பும் பெற்றோர், பிறப்பு சான்றிதழ் வருமான சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். எனவே மூன்று சான்றிதழ்களையும் முன்கூட்டிய தயார் செய்து கொள்ளுமாறு பெற்றோருக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.