தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சனிக்கிழமை (செப்.2) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.2) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிறு முதல் வியாழக்கிழமை (செப்.3 – 7) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: சனிக்கிழமை (செப்.2) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.