தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனரும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம்கபூர் இந்த பட்டியலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
01.01.2016 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற் கொள்ளுதல் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து உரிய படிவங்கள் பெறப்பட்டன. 16.09.2015 முதல் 24.10.2015 முடிய பெறப்பட்ட இந்த விண்ணப் படிவங்களை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்த பின்னர் 2016–ம் ஆண்டிற்கான துணைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்திலும் பார்க்கலாம். இறுதி வாக்காளர் பட்டியலில் 16 தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 47 ஆயிரத்து 16 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த 16 தொகுதிகளில் வேளச்சேரி தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக விளங்குகிறது.
15.09.2015 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 28 ஆயிரத்து 773 வாக்காளர்கள் இருந்தனர். 2016–ம் ஆண்டு சிறப்பு திருத்தம் தொடர்பாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 744 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 781 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 243 ஆகும். இது 3.9 சதவீதம்.
இந்த சுருக்க முறை திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 208 ஆகும். இது வரை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாத 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் அட்டை உடனடியாக வழங்கப்படும். 18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்த இறுதி திருத்த பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள் தேசிய வாக்காளர் தினமான வருகிற 25–ந் தேதி வாக்குப்பதிவு மையங்களில் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் பெயர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ விரும்பினால் நாளை முதல் அனைத்து மண்டல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் அளிக்கப்படும். இது தவிர வருகிற 30ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 6ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
English Summary: Publication of the final voter list, Chennai District.