தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பயணிக்கும் பிரத்யேக பேருந்து
உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பெருவிழாக்களில் ஒன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது புதிய தலைமுறை. இதற்காக தொலைக்காட்சியில் உள்ள எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் வகையில் சிறப்புப் பேருந்து ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஜனநாயகப் பெருவிழா’ என்ற பெயரில், ‘தேர்தல்னா புதியதலைமுறை’ என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் புறப்படக் காத்திருக்கிறது புதிய தலைமுறையின் தேர்தல் பேருந்து.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளுக்கும் இப்பேருந்து பயணிக்கும். இதில் நேரலை செய்யக்கூடிய கருவிகள், செய்தி அறை, விவாத அரங்கு என எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தென் தமிழகத்திலேயே பேருந்து ஒன்று, தொலைக்காட்சியாக மாற்றுரு பெற்றிருப்பது இதுவே முதல்முறை!
பயண வழியெங்கும் நடைபெறும் அரசியல் கட்சியினரின் பரப்புரைகள், தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள், நடுநிலையாளர்களின் அலசல்கள், என 360 கோணத்திலும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும், எதார்த்த விமர்சனங்களையும் பதிவு செய்யும் ‘மக்களுடன் புதிய தலைமுறை’, முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தைப் படம் பிடிக்கும் ‘முதல் தலைமுறையுடன் புதிய தலைமுறை(18+)’, தொகுதி வேட்பாளர்கள், கட்சித் தலைவர்களின் தேர்தல் வியூகம், கொடுத்த வாக்குறுதிகள் என மக்களின் மனசாட்சியாய் நின்று கேள்வி எழுப்பும் ‘தலைவர்களுடன் புதிய தலைமுறை’ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நேயர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. செய்தி அரங்கில் இருந்து ஒளிபரப்பப்பட்ட நேர்படப் பேசு நிகழ்ச்சி, தேர்தல் களத்தில் மக்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நாள்தோறும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்டத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெற இருக்கிறது. சைக்கிள் பேரணி, மாணவர்கள் பேரணி எனப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளையும் புதிய தலைமுறையின் நட்சத்திர நெறியாளர்கள் தொகுத்து வழங்க இருக்கின்றனர். தகிக்கும் வெயிலுக்கு இடையே, தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரைகளில் தொடங்கி களத்தில் அரங்கேறும் அத்தனை நிகழ்ச்சிகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்த காத்திருக்கிறது புதிய தலைமுறையின் ஜனநாயகப் பெருவிழா.