தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசைகாற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 21, 24 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 22, 23 தேதிகளில் கடலோர மாவட்டங்கள்மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
20-ம் தேதி காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில்கடலூர் மாவட்டம் பெலாந்துறையில் 9 செமீ, கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர், சிதம்பரம், தொழுதூர் ஆகிய இடங்களில் தலா 8 செமீ, வேப்பூரில் 7 செமீ, கீழச்செருவாய், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, செங்கல்பட்டு மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம், பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஆகியஇடங்களில் தலா 6 செமீ மழைபதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.