வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மழை குறித்த அப்டேட் கொடுக்க, சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அதன் இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது அவர், ‘வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.
இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்புள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக காரைக்கால் மற்றும் தரங்கம்பாடியில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம், புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்’ என்று தகவல் தெரிவித்தார்.