சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மழைநீர் சேகரிப்புதான் ஒரே வழி என்பதை உணர்ந்த தமிழக அரசு, முதன்முதலில் 1994-ம் ஆண்டு வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. அத்துடன் புதிய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக 2000-ம் ஆண்டு முதல் அனைத்து வகை கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்து அதனை சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது. பின்னர், 2003-ம் ஆண்டுமுதல் அனைத்துக் கட்டிடங்களிலும் அதாவது புதிய கட்டிடங்களுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கும், பழைய கட்டிடங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைப் புதுப்பிப்பதற்கும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்தது.

சென்னையில் தற்போது 8 லட் சத்து 62 ஆயிரத்து 700 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்து, வீடுகளில் உள்ள கிணறுகள், மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்இருப்பை மேம்படுத்துவதே மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் நோக்க மாகும்.

அரசு உத்தரவின்பேரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத் திய மக்கள், அதனை சரிவர பராமரிக் காததால் மேற்கண்ட நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.

பராமரிப்புக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் அவசியம் குறித்து கையேடுகள், குறிப்பேடுகள் வழங்கியும், பத்திரிகைகளில் விளம் பரம் செய்தும், கருத்தரங்குகள் நடத் தியும், பொருட்காட்சிகளில் காட்சிக் கூடம் அமைத்தும் சென்னை குடிநீர் வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் பலன் நகரின் சில பகுதிகளில் மட்டுமே கிடைத்துள்ளது. திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கபெருமாள் கோயில் தெரு, மேற்கு மாம்பலம் ஆரியகவுடா சாலை போன்ற சில பகுதிகளில் மட்டும் மழைநீர் சேகரிப்பின் பலன் முழுமையாகக் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக மழைநீர் சேகரிப்பால் ஆரியகவுடா சாலையில் உள்ள பழமையான (1975-ல் கட்டியது) வீட்டில் உள்ள கிணற்றுத் தண்ணீரை கடந்த 25 ஆண்டுகளாக குடிக்கவும், சமைக்கவும், குளிக்கவும் என அனைத்து பயன்பாட்டுக்கும் பயன் படுத்தி வருகிறார்கள்.

சென்னை மாநகரின் பல பகுதி களில் 400 அடி ஆழம் வரை ஆழ் குழாய் கிணறுகள் இருக்கும் நிலையில் திருவல்லிக்கேணியில் 120 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. ஆரியகவுடா சாலையில் 15 அடி ஆழத்திலேயே சுவையான நீர் கிடைப்பது அதிசயம் கலந்த உண்மை.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கு (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) முன்பே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் பேரணி, மனித சங்கிலி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், மக்கள் கூடும் முக்கியமான இடங்கள், சென்னை குடிநீர் வாரிய விரிவு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து வண்ண பதாகைகள் வைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். அரசு உத்தரவை மீறி கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *