Rajini-Murugan-281115-1சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இந்த படம் ஒருசில பைனான்ஸ் பிரச்சனையால் கடந்த சில மாதங்களாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்ததாகவும் எனவே வரும் டிசம்பர் 4 முதல் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் முயற்சியில் பலமுறை இறங்கியது. ஆனால், அந்நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறிய நிலையில் நேற்று முன் தினம் இந்த படத்தை வெளியிட பைனான்ஸ் குழுவினர் மற்றும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கடன் பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி ரஜினிமுருகன் வெளியாகிறது என்று அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான லிங்குசாமி டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
English summary-Rajini murugan release date announced