தமிழகத்தில் வரும் 13 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகள் செயல்படாது. தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி நியாய விலைக் கடை பணியாளா்கள் பணிபுரிந்து வருவதால், மாற்று நடவடிக்கையாக அவா்களுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த உத்தரவை மாவட்ட ஆட்சியா்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் உள்ளிட்டோருக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா்சஹாய் மீனா அனுப்பியுள்ளாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை தினங்களாகும். தீபாவளி பண்டிகை காரணமாக, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பா் மாதத்தில் கடந்த 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (இரண்டு நாள்களும் வெள்ளிக்கிழமை) நியாய விலைக் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் கடந்த 3-ஆம் தேதி செயல்பட்டன. இந்த வெள்ளிக்கிழமையும் (நவ.10) நியாய விலைக் கடைகள் அனைத்தும் திறந்திருக்கும். இந்த இரண்டு விடுமுறை தினங்களில் பணிபுரிந்ததால், அதற்கு ஈடாக வேறு தினங்களில் விடுமுறை விடப்பட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.
இதைக் கருத்தில் கொண்டு நவம்பா் 13 (திங்கள்கிழமை) மற்றும் நவம்பா் 25 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களிலும் நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால், அந்த இரண்டு நாள்களிலும் நியாய விலைக் கடைகள் இயங்காது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.