தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கோடை வெயில் தமிழகம் எங்கும் 100 டிகிரிக்கும் அதிகமாக சுட்டெரித்து கொண்டு வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்தி வைக்கப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. புதுச்சேரியில் வெயில் காரணமாக ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்திலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக்கல்வி அமைச்சர் பா. பெஞ்ஜமின் தலைமையில், செயலர் சபிதா, கல்வித் துறை இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மாநாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிகள் திறக்கும் நாள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியபோது, பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. எனினும் ஓரிரு நாளில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு குறித்து முடிவு செய்யப்படலாம் என்று தெரிவித்தனர்.
2016-17 கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதியன்று, பள்ளிகள் திறக்கும் போது அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கான விலையில்லா நலத் திட்டங்களுக்காக ரூ. 3,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவது குறித்து திட்டமிடும் வகையில், பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், விலையில்லா புவியியல் வரைப்படம், விலையில்லா சீருடைகள் மற்றும் இதர மாணவர்கள் நலத்திட்ட பொருள்களும் வழங்குவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பா. பெஞ்ஜமின் அறிவுரைகள் வழங்கினார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இலவச பயண அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் பள்ளிகள் திறந்தவுடன் வழங்கப்படும் என்றும், பள்ளிகள் திறக்கும் நாள் முதல் ஒரு வாரம் வரை பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் மாணவர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary : Re-opening of schools postponed to June 6?