தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் பரிசு பெற்றுள்ளதாக வரும் போலி இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக தலைமை அஞ்சல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் “கோடிக் கணக்கில் பரிசு’ போன்ற போலியான மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதை நம்பி பலர் தங்களின் பணத்தை இழந்துள்ளனர். வங்கிக் கணக்கு எண், பற்று, கடன் அட்டை ரகசியக் குறியீடு போன்ற வங்கிக் கணக்கு பற்றிய தனிப்பட்ட விவரங்களை கேட்டும், அழைப்பு, மின்னஞ்சல்கள் வருவதாகவும் வாடிக்கையாளர்களின் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்களை வங்கிகள் கேட்பதில்லை. இதேபோன்று, போலியான அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வந்தால், ரிசர்வ் வங்கியின் வங்கிக் குறைதீர்ப்பு அமைப்புக்கு புகார் தெரிவிக்கலாம்.
இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுவதற்கு, இந்திய அஞ்சல் துறையின் “மீடியா போஸ்ட்’, “டைரக்ட் போஸ்ட்’ ஆகிய சேவைகளை ரிசர்வ் வங்கி பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, முதல் கட்டமாக 4 மாவட்டங்களில் விழிப்புணர்வு குறித்த செய்திகளுடன், 80 ஆயிரம் முகவரி இல்லாத கடிதங்களை நேரடியாக அனுப்புகிறது. கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் அஞ்சல் துறையின் “டைரக்ட் போஸ்ட்’ சேவையின் கீழ் விழிப்புணர்வு குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும். பிற மாவட்டங்களுக்கும் பிரசாரம் விரிவுபடுத்தப்படும்.
அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் சேவையின் கீழ், வங்கிக் குறை தீர்ப்பாணையம் பற்றிய தகவல்கள் அடங்கிய விளம்பரத்துடன் 1 லட்சம் அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன’ என்று கூறினார்.
மேலும் இதுபோன்ற போலி மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வந்தால் 044-28511600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது helpdeskcbcid.tnpol@nic.in என்ற மின்னஞ்சலிலோ தெரியப்படுத்தினால் தொடர் நடவடிக்கையை மேற்கொள்வோம் என சிபிசிஐடி (சைபர் கிரைம்) கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் இந்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: கோடிக் கணக்கில் பரிசு, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு எண், பற்று, கடன் அட்டை ரகசிய குறியீடு போன்ற வங்கிக் கணக்கு பற்றிய தனிப்பட்ட விவரங்களை கேட்டு சர்வதேச நாடுகளிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் போலி மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இன்று வரையும் விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னை மாவட்டத்தை சேர்ந்தவையே அதிகம். கிராமங்களில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இதனால், பெரும்பாலான குற்றங்கள் வெளிவருவதில்லை. பொதுமக்கள் போலிகளை நம்பி பணத்தை இழந்தால், அவற்றை திரும்பப் பெறுவது கடினமாகும். இருப்பினும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று கூறினார்.English summary-What to do while receiving fake mails