சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சேதம்டைந்தும், தொலைந்து போயும் உள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் காணாமல் சான்றிதழ்களை மீண்டும் பெற்றுத் தருவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று கோட்டூர்புரம். அடையாறு கரையோரம் உள்ள இந்த பகுதியில் உள்ள சித்ரா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கோட்டூர்புரம் கார்டன், ரஞ்சித் சாலை உள்பட பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதியில், மயிலாப்பூர் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில் 300 போலீஸார் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை காப்பாற்றினர்.
தற்போது இந்த பகுதியில் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில், பெரும்பாலானோரின் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்பட முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும், காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இந்த சான்றிதழின் நகல்களை பெறவேண்டும் என்றால் காவல்துறையின் சான்றிதழ் தேவை.
எனவே இப்பகுதி மக்களுக்கு உதவிட, காவல் துறை சான்றிதழ்களை எளிதில் பெறும் வகையில் கோட்டூர்புரம் விநாயகர் கோயில் அருகே காவல் உதவி மையத்தை துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார். இதுதவிர, வளர்ப்புப் பிராணிகளைக் கண்டறியவதற்கும் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும் தனது தனிப்பட்ட முயற்சியால் 1,400 பேருக்கு போர்வை, பாய், பால் பவுடர், துடைப்பம், வாளி உள்ளிட்ட பொருள்களை வி.பாலகிருஷ்ணன் பெற்று வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-Police station opened at Kotturpuram to recover lost certificates in flood