வட்டார சுகாதார புள்ளியியலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஏற்கனவே கடந்த வாரம் முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வு கடந்த 19.08.2014 அன்று நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 101 விண்ணப்பதாரரில் 39 பேர் மட்டுமே நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள தவறிய விண்ணப்பதாரருக்கு பதிலாக 61 விண்ணப்பதாரர் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விண்ணப்பதாரருக்கும், புள்ளியியல் உதவியாளர் பதவிக்கான 36 விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்கும் பொருட்டு வருகிற 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary : Since 1st stage Regional health statistician certificate has been issued, 2nd stage certificate will be issued on September 1st at TNPSC Head Office.