நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று ஆரம்பமானது. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக். இன்றைய தொடக்கவிழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்திச்சென்றார்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்கவுள்ளனர்.
மொத்தம் 31 விளையாட்டுகளில் 41 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 306 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. சாவோ பாவ்லோ, பெல்லோ ஹாரிசோன்டி, சல்வேடார், பிரேசில்லா, மனாஸ் ஆகிய 5 நகரங்களில் உள்ள 33 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. தொடக்க விழாவின் இறுதியாக இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கைகள் ரியோ நகரையே அதிர வைத்தது.
இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 292 வீராங்கனைகள் உள்பட 554 பேர்கள் கலந்து கொள்கின்றனர். சீனா 413 பேரையும், பிரிட்டன் 366 பேரையும், போட்டியை நடத்தும் பிரேசில் 465 பேரையும் களமிறக்கியுள்ளன
English Summary: Rio Olympic festival festivity started