பிளாஸ்டிக் கவர்களை கடையில் வைத்திருந்த உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் மக்காத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள் மற்றும் மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற அத்யாவசிய பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல இடங்களில் பிளாடிக் பைகள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் சென்னை அடையாரில் கடை ஒன்றில் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.