தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் விதிமீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2.39 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் 12 மண்டலங்களைச் சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் 11,023 வாகனங்களை சோதனை செய்தனர்.
அதிக பாரம் ஏற்றுதல், அதிக பயணிகளை ஏற்றுதல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2,281 வாகனங்கள்மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். வாகனங்களின் நிலுவை வரியாக ரூ.28.49 லட்சம், விதிமீறலுக்கான அபராதமாக ரூ.2.11 கோடி என மொத்தம் ரூ.2.39 கோடி வசூலிக்கப்பட்டது. இது போன்ற திடீர் சோதனைகள் மாநிலம் தழுவிய அளவில் அவ்வப்போது நடத்தப்படும் என்றார்.