ஒருகாலத்தின் சென்னையின் அழகை மெருகேற்றிய கூவம் ஆறு தற்போது கழிவுநீர்க் கால்வாயாக மாறியுள்ளது. இந்த கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று சென்னை மக்களின் நெடுநாளைய கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு இதற்கென ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தியது.
சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை என்ற பெயரை உடைய இந்த அறக்கட்டளையின் தலைமையில் சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறையின் நீர் வளப் பிரிவு, சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றின் ஒரு பகுதியில் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ள கிளைக்கால்வாய் என்று கூறப்படும் பேபி கெனால் அமைத்து அதன் மூலம் கழிவுநீரை திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை 3 பிரிவுகளாக பிரித்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
முதல் பிரிவாக சேத்துப்பட்டு பாலம் முதல் பாடிக்குப்பம் வரையிலும், இரண்டாம் பிரிவாக பாடிக்குப்பத்தில் இருந்து வானகரம் வரையிலும், மூன்றாவது பிரிவாக வானகரத்தில் இருந்து 5000 மீட்டர் தொலைவுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.42.74 கோடிக்கு நேற்று ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையின் நீர்வளப் பிரிவு இந்த ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary :A longstanding demand of the people who want to clean up the Koovam river in Chennai is now taken action by allotting Rs. 42.74 crore budget for this project.