டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர்களுக்கு மிகுந்த சலுகைகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டில் கோடைகாலத்தில் லோக்சபாவிற்கு பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. எனவே தற்போதைய மோடி அரசின் தேர்தலுக்கு முந்தைய இறுதி பட்ஜெட்டாக இந்த இடைக்கால பட்ஜெட் அமைய உள்ளது. இதில் பல கவர்ச்சிகர சலுகைகள் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்களும், பொருளாதார வல்லுனர்களும் கணிக்கிறார்கள்.
வருமான வரி உச்சவரம்பு: இதில் மிக முக்கியமானதும், மிக நீண்ட நாள் கோரிக்கையுமானதும், தனிநபர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக் கூடியதுமான வருமான வரி உச்சவரம்பு உயர்வு என்ற அஸ்திரமும் ஒன்றாகும். தனிநபர் வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற உச்சவரம்பு 2014ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று சலுகை வழங்கப்பட்டது. ஆனால் விலைவாசி உள்ளிட்ட, நடப்பு நிலவரத்தை ஒப்பிட்டால் இந்த அளவு என்பது மிகமிகக் குறைவாகும்.
ஏமாற்று வேலை: எனவே தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு என்பது அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் இதே போன்று எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் மத்திய அரசு வேறுவிதமான ஒரு சிறிய சலுகை அளித்தது. அதாவது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருவாய் கொண்டவருக்கு 10 சதவீத வருமான வரி விதிக்கப்பட்ட நிலையில், அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் இந்த சிறு சலுகையால், தனிநபர்களுக்கு பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை.
ரூ.3 லட்சம் வரை: மத்தியதர சம்பளக்காரர்களின் இந்த மனக் குமுறலை கருத்தில் கொண்டு வருமான வரி உச்சவரம்பு ஆண்டுக்கு 3 லட்சம் என்ற அளவில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் தனிநபர்களுக்கு, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் பெருவாரியான சம்பளதாரர்களின் மிக முக்கிய கோரிக்கை ஆகும்.
80 சி: இதேபோல 80சி பிரிவின் கீழ் வழங்கப்படும் வரிவிலக்கு என்பது, ரூ.1.5 லட்சத்திலிருந்து இரண்டரை லட்சமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக மக்கள் பல்வேறு நிதி முதலீடுகளை நாடிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
வீட்டுக்கடன்: வீட்டுக்கடன் மீதான வட்டி கழிவு தற்போது 2 லட்சமாக உள்ளது. இது 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வாய்ப்புள்ளது. வீட்டு கடன் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.