sandeep-saxena-28102015
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் ஆகியவை தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீவிர முயற்சியால் தமிழகம் முழுவதும் இருந்து 21 லட்சத்து 64 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடி அலுவலர்கள் கள ஆய்வை தொடங்கியுள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, 2016 ஜனவரி 1-ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகவரி மாற்றம், திருத்தம், தொகுதி விட்டு வேறு தொகுதி மாறுதல் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 20, அக்டோபர் 4, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 14-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் முடிந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பாக கடந்த 24-ம் தேதி வரை, 21 லட்சத்து 64 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் முகவரி மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

மனு அளித்துள்ளவர்களில் 7.50 லட்சம் பேர் தங்கள் கைபேசி எண்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு, விண்ணப்பம் ஏற்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பதிவு செய்யும் பணியை காஞ்சிபுரம், நெல்லை, அரியலூர் மாவட்டங்கள் முடித்துவிட்டன. மற்ற மாவட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்தகட்டமாக விவரங்கள் தொகுக்கப்பட்டு, கள ஆய்வுக்கான விவர பட்டியல்கள் வாக்குச்சாவடி அலுவலருக்கு அனுப்பப்படும். அவர் ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் பணிகள் முடியும்.

வாக்காளர் அடையாள அட்டை வேண்டுவோர், படிவம் 001-ஐ பூர்த்தி செய்து ரூ.25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் படிவம் 001-ஐ பதிவு செய்தவர்கள், அதை பிரதி எடுத்து, தாலுகா அலுவலகங்களில் பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்
English summary-sandeep saxena says about name correction in voter card