sbim181215சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு அடைந்த பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், ஏராளமான தனியார் தொண்டு நிறுவனங்களும், திரையுலகினர்களும் நிவாரண பொருட்கள் அளித்து வரும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கியும் இந்த பணியில் தன்னை இணைத்து கொண்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் சமுதாயப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சென்னையில் நேற்று ன்னையில் உள்ள ஐந்து அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிக்கரணை, மகாகவி பாரதிநகர், மீஞ்சூர் உள்பட 5 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப் பைகள், நோட்டு-புத்தகங்கள், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன, மேலும் சென்னை தரமணியில் உள்ள வி.ஹெச்.எஸ். மருத்துவமனைக்கு மயக்க மருந்து ஆய்வுக் கூடம் அமைக்க ரூ.15 லட்சமும், மோகன் அறக்கட்டளைக்கு விடியோ கான்ஃபரன்சிங் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்த ரூ.17.38 லட்சமும் ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டன.

வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜனீஷ்குமார் பேசியது:- மாணவர்கள், ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக சென்னை மண்டலத்தில் இதுவரை நிகழாண்டில் ரூ.2 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்கள் முழுமையாக மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வங்கி ஆவணங்களை இழந்த வாடிக்கையாளர்களுக்கு அவற்றைத் திரும்ப வழங்குதல், புதிய கடனுதவி அளித்தல் போன்றவை உள்பட உடனடியாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து மாநில வங்கியாளர் குழுமத்தின் சார்பில் ஆலோசித்து வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக அடுத்த நிதியாண்டில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அந்தக் காலகட்டத்தில் வங்கியின் கடனளிப்பு 16 சதவீத வளர்ச்சி பெறும்’ என்று கூறினார்.
English summary-SBI helps flood affected 5 schools in Chennai