சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவித் தொகை வழங்க சென்னை மாநகராட்சியில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதனால் தொழிற்பயிற்சி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தீர்மானம் குறித்த விபரம் வருமாறு:
சென்னை மாநகராட்சியின் தொழிற்பயிற்சி நிலையத்தில் 254 பேர் பயிற்சி பெறுகிறார்கள். இந்தத் தொழிற்பயிற்சிக்கான செலவுகள் அனைத்தையும் மாநகராட்சியே மேற்கொள்கிறது. இந்நிலையில், அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் மூலம், அரசுத் தொழிற்பயிற்சி நிலை மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
சென்னை மாநகராட்சித் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெரும்பாலும் ஏழை மாணவர்களே பயிற்சி பெறுகின்றனர். சிலர் தொழிற்பயிற்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்கின்றனர். இதனால், அனைத்து மாநகராட்சி தொழிற்பயிற்சி மாணவர்களுக்கும் அரசு வழங்குவதுபோல ரூ. 500 உதவித் தொகையை மாநகராட்சியே வழங்கும். இதற்கு மாதந்தோறும் ரூ. 15.24 லட்சம் செலவாகும். இந்த உதவித் தொகை பயிற்சி பெறும் மாணவர்களின் வருகை நாள்களின் அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கவும், பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கு உணவு மற்றும் உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்களை தொண்டு நிறுவனங்களே தொடர்ந்து நடத்தவும் அனுமதியளித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
English Summary : Rs.500 Scholarship for Vocational training students announced by Chennai corporation.