தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜுன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு கல்வித்துறை இயக்குனரகம் இன்று அறிவித்துள்ளது.
சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் உக்கிரம் இன்னும் குறையாமல் 100 டிகிரிக்கு மேலாக கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.
இதன் காரணமாக பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. புதுவையில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்-பெற்றோர் நல சங்கமும் ஆசிரியர் கூட்டணியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். தலைமை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளருடன் நடந்த ஆலோசனையில் கடந்த 5 வருடங்களில் பள்ளிகள் எந்தெந்த தேதிகளில் திறக்கப்பட்டது, வெயிலின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் ஏற்கனவே அரசு அறிவித்திருந்தபடி ஜுன் மாதம் முதல் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு கல்வித்துறை இயக்குனரகம் இன்று அறிவித்துள்ளது. மாணவ-மாணவியருக்கான இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஜுன் முதல் தேதியன்றே அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Schools will be opened as scheduled on June 1. Directorate of Education department Announced.