RBI-1-111215இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களில் பெயர், போன் நம்பர், கவிதை போன்றவற்றை எழுதி வைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. இவ்வாறு ரூபாய் நோட்டுக்களில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த நோட்டு 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செல்லாது என கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தென் மண்டல அலுவலக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, “எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லாது என்றோ, ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றோ ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் ரூபாய் நோட்டுகளில் பெயர்கள், கவிதைகள், தனிநபர் புகழ் வார்த்தைகள், மதம் தொடர்புடைய வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தால் அந்த ரூபாய்த் தாள்கள் செல்லுமா செல்லாதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம், ரிசர்வ் வங்கியின் மண்டலங்களில் உள்ள தீர்வை ஆபிஸர்க்கு உள்ளது என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினர்

ரூபாய்த் தாள்களில் கிறுக்குவதால் அரசுக்கு ரூ.2,638 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் செல்லாது என்றும் செய்திகள் பரவுகின்றன. ஆனால் உண்மையில், மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கிகளின் தலைமை அலுவலகங்களுக்கு எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நவீன எந்திரம் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதன்படி ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் ரூபாய்த் தாள்கள் தனியாகவும், பொதுமக்களுக்காகப் புழக்கத்தில் விடும் ரூபாய்த் தாள்கள் தனியாகவும், கிழிந்த, அழுக்கான, எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றன.

கிழிந்த, அழுக்கான, எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் 100 தாள்களில் 90 தாள்கள் எழுதப்பட்ட ரூபாய்களாக உள்ளன. 2014-ம் ஆண்டு அச்சிடப்பட்ட ரூபாய் தாள்கள் கூட அழிக்கப்படுவதற்காக அனுப்பப்படுகின்றன என்பதால் ரிசர்வ் வங்கி இந்த விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் அச்சடிப்பதற்கு மத்திய அரசு அதிகம் செலவழிக்கிறது. ஆனால் இன்னும் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருக்க வேண்டிய ஆயிரம் ரூபாய், 500 ரூபாய்த் தாள்கள் கூட அழிப்பதற்காக அனுப்பப்படுவது அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனல் அரசுக்கு ஏற்படும் வீண் செலவைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ரூபாய் தாள்களில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது
English summary-Scribbled, soiled currency notes now have zero value from Jan 1, 2016 by RBI