high-court-01கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி எதிரில் அமர்ந்து வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் நீதிமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியதாக கருதப்பட்டதால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜேந்திர சதுர்வேதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காவல், பொது அமைதி என்பது மாநில அரசு விவகாரம். மாநில அரசு கோரினால் மட்டுமே மத்திய படையை அனுப்ப வேண்டும். மத்திய படைகளை நியமித்தால் அனைவரது கைப்பைகள், சூட்கேஸ்கள் சோதிக்கப்படும். இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

மத்திய படையினருக்கு உள்ளூர் மொழி தெரியாததால் பதற்றம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமாகும். அவர்களுக்கும் மாநில போலீஸாருக்கும் அதிகார வரம்பு தொடர்பான பிரச்சினைகளும் எழும்.

உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தேவைப்பட்டால், 650 காவலர்கள் தேவை. அவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.32.73 கோடி செலவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் என்றால் ரூ.16.60 கோடி தேவை. மத்திய படை பாதுகாப்பு தேவை என்றால், இத்தொகையை டெபாசிட் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்” என்று மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‘நீதிமன்ற பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. இது ஈகோ பிரச்சினை அல்ல. உயர் நீதிமன்றப் பாதுகாப்பு முக்கியம் என்ற அடிப்படையில் ஆராயவேண்டும். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படைதான் பாதுகாப்பு வழங்குகிறது. இது வழக்கமானதுதான்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 வெடிகுண்டு புரளி சம்பவங்கள் நடந்தன. சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்துக்குள் பதாகைகளை எடுத்து வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற வராண்டாவில் குழுவாக நின்று கோஷமிடுவது, நீதிமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது போன்றவை ஆரோக்கியமானது அல்ல. இவற்றை கருத்தில் கொண்டுதான் மத்திய பாதுகாப்பு படை தேவை என்கிறோம்.

எனவே, சிஐஎஸ்எப் படையை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு இன்னும் 7 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு, உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் படையினரை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் திறக்கப்படும்போது இங்கு புதிய பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டும்’ இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தெரிவித்தார்.
English summary-Central Protection Force to provide security for Chennai High Court from 16th November.