தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் டிசம்பர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் என மொத்தம் 1,178 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் தேர்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 25), வெள்ளிக்கிழமை (நவ. 30) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கஜா புயல் காரணமாக இந்தத் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
மறு தேர்வு குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட வனத் துறை பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு வரும் டிசம்பர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், வனவர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாள்களிலும் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும்.