12_exam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தேர்வுகள் முடிவடைந்து முக்கிய தேர்வான வேதியியல் தேர்வு கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் கட்-ஆப் மதிப்பெண் உயரும் என்பதால் கனவுடன் சென்ற மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள் கேள்வித்தாள்களை கிழித்து எரிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வேதியியல் தேர்வை சரியாக எழுதாத கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்ல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தார். வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததை அடுத்து இனிவரும் எந்த தேர்வுகளையும் எழுத மாட்டோம் என்று பெரும்பாலான மாணவர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வேதியியல் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. முன்னணி பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசியில் பேசி ஆதங்கப்படுவதுடன், கல்வித்துறை மற்றும் அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லவும் முயன்று வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு மாநில அரசு, வேதியியலில் 8 பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி கேள்வித்தாள் அடங்கிய புத்தகத்தை தயாரித்தது. இதனை மட்டும் நன்கு படித்தால் 150 மதிப்பெண்களை எளிதாக பெறமுடியும் என்று கூறியிருந்தது. இந்த மாதிரி புத்தகத்தை நம்பி பல மாணவர்கள் படித்து வந்ததாகவும், ஆனால் அதில் இருந்து வெறும் 25 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும்,  அதுவும் நேரடியாக கேள்வியை கேட்காமல் புரியாத வகையில் குழப்பும் வகையில் மாற்றி கேட்டுள்ளதாகவும் மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
மாதிரி கேள்விதாள் புத்தகத்தை அரசு தராமல் இருந்து இருந்தால், புத்தகத்தை முழுவதுமாக படித்திருப்போம் என்றும், மாதிரி புத்தகத்தை கொடுத்து தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகளை தான் கேட்டிருக்கிறோம் என்று கூறும் கல்வித்துறை அதிகாரிகள் ஏன் மாணவர்களை குழப்பும் வகையில் கேட்டுள்ளனர் என்றும் புத்தகத்திலேயே தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ள கேள்விகளை வினாத்தாளில் ஏன் கேட்க வேண்டும்? என்றும் இவ்வளவு கடினமாக கேள்விகளை கேட்டு என்ன சாதிக்க போகிறார்கள் என்றும் இந்த கேள்வித்தாளை வேதியியல் ஆசிரியர் ஒருவரே எழுதினாலும் வெற்றி பெறமுடியாத நிலையில் தான் கேள்விகள் இருப்பதாகவும் பெரும்பாலான ஆசிரியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வேதியியல் தேர்வுக்கு பாடத்திட்டத்தில் இருந்து, மாணவர்களை சிந்திக்க வைக்கும் வகையில் மறைமுகமாக கேள்விகளை கேட்டுள்ளோம். மறுதேர்வு நடத்தவும், கருணை மதிப்பெண் வழங்கவும் வாய்ப்பில்லை, அரசு அளித்த மாதிரி வினாத்தாள் புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும் என்று 3 முறை பள்ளிகளுக்கு சர்குலர் அனுப்பியுள்ளோம், படித்த மாணவர்களுக்கு எளிதாக இருந்தது, படிக்காதவர்களுக்கு தேர்வு கடினமாக இருந்தது, வேண்டும் என்றால் வருங்காலங்களில் பெற்றோர்கள் கூறியபடி கேள்விகளை கேட்கிறோம்” என்று கூறினார்.
English Summary: Selection will be conducted again in 12th grade chemistry? Education officials.