தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை துவக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்தும், கல்வித்துறை வழங்கப்படும் மானியங்கள் குறித்தும், கல்வித்துறை நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பாக புதிய பாடத்திட்டம் கொண்டு வந்தது, இலவச நீட் தேர்வு மையங்கள், இலவச நீட் தேர்வு பயிற்சி, மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து ஆங்கில பேராசிரியர்களை வரவழைத்து வகுப்பு எடுத்தது, பயோமெட்ரிக் முறையில் மாணவர்களின் வருகை பதிவை பதிவு. அதேபோன்று ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு, சீருடையில் மாற்றம், ஆசிரியர்களுக்கும் சீருடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் துவங்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் முழுக்க முழுக்க கல்விக்காக மட்டுமே புதிய கல்வி தொலைக்காட்சியும் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி ஜனவரி மாதமான இந்த மாதம், அதாவது தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்வதற்கு ஏற்ப தை பிறந்தவுடன், ஒரு நல்ல நாளில் கல்வி தொலைக்காட்சியை துவக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்படி வரும் 21ஆம் தேதி கல்வி தொலைக்காட்சி சேவை துவங்கப்பட உள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் மிக எளிதாக பெறமுடியும். அதில் குறிப்பாக கல்வித் துறையில் வழங்கப்படக்கூடிய முக்கிய நல திட்டங்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். கல்வித்துறையில் முக்கிய செயல்பாடுகள் பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படக்கூடிய மானியங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்படும். இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு, தேவையான விவரங்களை கல்வி தொலைக்காட்சியின் மூலமாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
கல்வி தொலைக்காட்சி சேவை துவங்கிய உடன் மாணவர்களின் கல்வித் தரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.