கோடை வெயிலையொட்டி உடல் ஆரோக்கியம் காப்பது தொடர்பாக சிறப்பு சித்த மருத்துவ முகாம், எடப்பாடி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை மருத்துவ அலுவலர் மோகன் தொடக்கி வைத்தார். முகாமில் தற்போது நிலவும் கோடை வெயிலால் ஏற்படும் சிறுநீர் உபாதைகள், கண் எரிச்சல், வேனீர் கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கோடை கால நோய்களுக்கு சித்த மருத்துவத்தின் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சித்த மருத்துவர் கண்ணன் கூறியதாவது:
கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு பூசணிக்காய்த் துண்டுகளை சாப்பிடுவதுடன், தினமும் காலை எழுந்தவுடன் மோரில் வெந்தயம், இஞ்சி கலந்து நூறு மில்லி அளவு குடித்து வந்தால் கோடை முழுவதும் குளிர்ச்சியாக உணரலாம். மேலும் கருஞ்சீரகத்தை பொடி செய்து நூறு மில்லி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் சிறுநீர் தொடர்பான கோடைகால நோய்கள் முற்றிலும் நீங்கும்.
உடலிலிருந்து சரியான அளவில் வியர்வைத் துளிகள் வெளியேறாத நிலையில் வேனிற்கட்டிகள் உண்டாகின்றன, இதைத் தடுக்க சிறிதளவு சீரகத்துடன், 100 மில்லி அளவு தேங்காய் பால் சேர்த்து உடலில் பூசி வந்தால் வேனிற்கட்டிகள் உண்டாகாமல் தடுக்கலாம்
தொடர்ச்சியான வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் நீங்கிட கண்டங்கத்திரி சாறினை 100 மில்லி அளவு எடுத்து அதைச் சுத்தமான நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சூடாக்கி, குளிர்ந்த பின் உடலில் தேய்த்து குளித்தால் உடல் துர்நாற்றம் நீங்கும், கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் அரிப்புகள் நீங்க 500 கிராம் ஆவாரம் பூவுடன், 50 கிராம் பாசிப் பயிறை பொடியாக்கி உடலின் அனைத்து பாகங்களிலும் தேய்த்து குளித்தால், வெப்பத்தால் ஏற்படும் சரும நோய்கள் தீரும் என்றார்.