slateகல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி நடத்தப்பட உள்ளதாகவும் இந்த தேர்வு எழுத தகுதியுள்ள முதுகலை பட்ட தாரிகள் மற்றும்  இறுதி ஆண்டு முதுகலை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் அல்லது ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. நெட் தேர்வை சிபிஎஸ்இ அமைப்பு  ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. ஆனால்‘ஸ்லெட்’ தேர்வைப் பொருத்தவரையில் மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் இதை நடத்தும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தப்படாத நிலையில் வரும் கல்வியாண்டுகளான  2016 முதல் 2018 வரை 3 ஆண்டுகளுக்கு ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தும் பொறுப்பை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திடம் யுஜிசி ஒப்படைத்துள்ளது.

இதனை அடுத்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ‘ஸ்லெட்’ தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஸ்லெட்’ தேர்வு  வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவர வியல், வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், உளவியல், சட்டம் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது.‘ஸ்லெட்’ தேர்வெழுத வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. முதுகலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ, சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே பாடத்திட்டமும், தேர்வுமுறையும் ‘ஸ்லெட்’ தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக்குள் www.setexam2016.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்குமாறு ‘ஸ்லெட்’ தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

English Summary: ‘Slut’ last day to apply for the examination notice.