சென்னையில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் என்பது சென்னைவாசிகள் அனைவரும் தெரிந்ததே. இந்த கோவிலில் வரும் 7ஆம் தேதி மிகச்சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக இந்த கோவிலின் செயல் அலுவலர் ஆ.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சென்னை சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வர் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து ஜூன் மாதம் 7ஆம் தேதி காலை 9.05 மணி முதல் 10.05 மணிக்குள் வேள்வி மற்றும் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு அதன்பின்னர் விநாயகர், காரணீஸ்வரர், சொர்ணாம்பிகை, சோமாஸ்கந்தர் மற்றும் சகல மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் விசேஷ திருவீதி உலா நடைபெறும். பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வருகை தந்து சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரரின் அருளை பெற்று செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.