மாலத்தீவு அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. மாலத்தீவு முதல் தென்கிழக்கு அரபிக் கடல் வரை, கர்நாடக கடலோரப் பகுதி வழியாக காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது.
அதன் காரணமாக தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, மிகக் குறைந்த அளவாக உதகையில் 4 டிகிரி, கொடைக்கானலில் 7.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பகல் நேர அதிகபட்ச வெப்பநிலையில் அதிக அளவாக மதுரையில் 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.