இந்துக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே புதிய ஆடைகளை வாங்க பொதுமக்கள் ஆரம்பித்துவிடுவர். எனவே தீபாவளி நேரத்தில் சென்னை உள்பட அனைத்து முக்கிய பகுதிகளிலும் பெரும் நெருக்கடி ஏற்படுவது வழக்கம்.
குறிப்பாக சென்னையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் தீபாவளி ஷாப்பிங் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், பிராட்வே உள்ளிட்ட முக்கிய வணிக இடங்களுக்கு 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்க சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய நகர், புரசைவாக்கம், பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான வணிக இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான மக்கள் வருவார்கள்.
மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளின் சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகைக்காக பர்சேஸ் செய்யும் பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
English Summary:Special buses for the convenience of the public, in the Diwali shopping in Chennai.