தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக வரும் 15-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக போக்குவரத்துகழகங்கள் சார்பில் கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 1,415 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தவகையில், 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதில் 4.5 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதேபோல, ஆம்னி பேருந்துகளில் 1.50 லட்சம் பேர்பயணம் செய்திருந்தனர். இதன்மூலம் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.