job-fair5216சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் வீடுகள் ஒதுக்கப்பட்ட பகுதி அருகிலேயே அவர்களுக்கு வேலை கிடைக்க இன்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 150 தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 8000 பேர் வரை தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த சிறப்பு வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

“சென்னையில் 2015ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்கள் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். இது போன்ற இயற்கை பேரிடர்களுக்கு உட்படுத்தப்பட்டு வாழ்ந்து வந்த ஏழை குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களின் இன்னல்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக இக்குடும்பங்களின் துயர் போக்க சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.

இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டு இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலமாக வருகிற 6.2.2016 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை டி.பி.ஜெயின் கல்லூரி, துரைப்பாக்கம், சென்னை-96-ல் நடைபெற உள்ளது.

ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் உள்ள 150 தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அவர்கள் வாழும் இடத்திலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இரவு காவலர், ஓட்டுநர், சமையலர், கம்பியர் போன்ற இனங்களில் 8000-க்கும் மேலான பணிகளுக்கு, பணிநியமன ஆணைகளை, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளது.

வேலையளிப்போர் எதிர்பார்க்கும் சிறப்பு திறன்களை அறிந்து அதற்கான பயிற்சிகளை அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 25க்கும் மேற்பட்ட தொழிற்திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வளர்ச்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுள் 4,200 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூபாய் 4 கோடி செலவில் திறன் பயிற்சிகள் வழங்க பயிற்சியாளர்கள் தேர்வு செய்யவும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயல்நாட்டில் வேலைவாய்ப்பினை பெற விழைவோர், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவும் பதிவுகளைப் புதுப்பித்து கொள்ளவும் கூடுதல் பதிவுகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சுய தொழில் தொடங்க ஆலோசனைகளும் போட்டித்தேர்வுகள் குறித்த ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மறுகுடியமர்வு திட்டப்பகுதிகளிலிருந்து துரைப்பாக்கத்திற்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மறுகுடியமர்வு செய்யப்பட்ட 3,590 குடும்பங்களுடன் ஏற்கெனவே ஒக்கியம்-துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் அதனருகில் வசித்து வரும், குடிபெயர்ந்த 29,410 குடும்பங்களும் ஆக மொத்தம் 33,000 குடும்பங்களும் இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உள்ளது. ஆகவே, ஒக்கியம்- துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மறுகுடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

English Summary: Special Employment Camp for Flood Affected Peoples in Chennai.