ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரஹானே மற்றும் டிஜேஎம் ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை. ரஹானே 13 பந்துகளில் 13 ரன்களை எடுத்து கவுல் பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷார்ட்டும் 4 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த சாம்சன் அணியின் ஸ்கோரை உயர்த்த ஆரம்பித்தார்.
அந்த அணியில் அதிகபட்சமாக சாம்சன் 49 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் வெளியேறினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் மற்றும் எஸ்.கவுல் ஆகிய இருவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது.
126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. விருத்திமான் சாஹா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். விருத்திமான் சாஹா 5 ரன்களுடன் வெளியேற தவானுடன் கேப்டன் வில்லியம்சன் கூட்டணி சேர்ந்தார். இருவரும் மைதானத்தில் வானவேடிக்கை நிகழ்த்தினர். ஷிகர் தவானின் நேர்த்தியான டிரைவ்கள் பவுண்டரிகளாக மாறின. ஷிகர் தவானுக்கு வில்லியம்சன் ஈடுகொடுத்து விளையாடினார். 57 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 ரன்கள் அடித்தார். வில்லியம்சன் 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அந்த அணி 15.5 ஓவர்களிலேயே 27 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது.
English Summary: SRH Won by 9 Wickets