சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடங்கள் படிக்க மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
1.75 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் சென்னை ஸ்ரீ சங்கரா மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.ராகவன் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 2 வது இடத்தை தில்லி பப்ளிக் ஸ்கூல் மாணவர் சாகர் கோயல் என்ற மாணவரும், 3வது இடத்தை கொல்கத்தா செயிண்ட் சேவியர் பள்ளி மாணவர் சுபம் ராஜ்கரியா அவர்களும், 4 வது இடத்தை மும்பை பப்ளிக் ஸ்கூல் மாணவி ராகினி ஸ்ரீநாத் அவர்களும், 5வது இடத்தை தெலுங்கானா மாணவர் வேல்துர்தி அவர்களும் பெற்றுள்ளதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நுழைவுத்தேர்வில் முதல் 6 ஆயிரம் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு மே 17-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குவதாக கூறிய பாரிவேந்தர், முதல் 50 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாரிவேந்தர் பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனர் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் முதல் 50 மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியஅனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாணவர்களின் செலவுக்காக மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தரவரிசைப் பட்டியலில் 51 முதல் 250 வரையிலான இடத்தைப் பெற்ற மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 75 சதவீத சலுகையும், 251 முதல் 500 வரையிலான இடத்தைப் பெற்ற மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.