பிப்ரவரி 1 முதல், இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்ப கேபிள் ‘டிவி’ ஒளிபரப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. விரும்பும் தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய முறையை தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ‘டிராய்’ அறிவித்துள்ளது. இந்த முறை பிப்., 1ல் அமலுக்கு வருகிறது.
அனுமதி: இதில் தொலைக்காட்சி சேனல்கள் அதிக பட்சமாக 19 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள அனுமதி ழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறையில் குழப்பம் உள்ளதாக கூறி,பிப்., 1 முதல் இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்ப எம்.எஸ்.ஓ.,க்கள் எனப்படும் கேபிள் ‘டிவி’ ஒளிபரப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
கேபிள் ‘டிவி’ ஆப்பரேட்டர்கள் கூறியதாவது: வாடிக்கையாளர்கள் 153 ரூபாய் மாத கட்டணத்தில் கேபிள் ‘டிவி’ ஒளிபரப்பில் 100 இலவச சேனல்களை பெறலாம். மாத கட்டணத்தில் 55 சதவீதத்தை கேபிள் ஒளிபரப்பு நிறுவனங்களும் 45 சதவீதத்தை கேபிள் ‘டிவி’ ஆப்பரேட்டர்களும் கமிஷனாக பெறுவர். கட்டண சேனல்களுக்கான கட்டணத்தில் 20 சதவீதத்தை மட்டுமே ஒளி பரப்பு நிறுவனங்களும் கேபிள் ‘டிவி’ ஆப்பரேட்டர்களும் எடுத்துக் கொள்ள முடியும்.
கட்டணம்: மீதமுள்ள 80 சதவீதத்தை ‘டிவி’ சேனல்களுக்கு கொடுக்க வேண்டும். கட்டண சேனல்களுக்கான கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் கோரி வருகின்றனர் இது ஏற்கப்படவில்லை.இந்நிலையில் பிப்., 1 முதல், புதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. எனவே அன்று முதல் இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்ப கேபிள் ‘டிவி’ ஒளிபரப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் பின் கட்டண சேனல்களின் விபரங்களை வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து விரும்பிய சேனல்களை தேர்வு செய்யும்படி கொடுக்க உள்ளனர்.